அஜித் நடிக்கப் போகும் அடுத்த படம் யாருக்கு? இந்த கேள்விதான் கோடம்பாக்கத்தை குடைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாதளவுக்கு 'மங்காத்தா' படத்தின் வசூல் அமைந்துவிட்டதால், அஜித்தை கொத்திக் கொண்டு போக ஆளாளுக்கு வெறி. இடையில் யார் யாரையோ மனதில் யோசித்து வைத்திருந்த அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்திலும் அதற்கு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாகவும் இருந்தாராம். இந்த நேரத்தில்தான் குறுக்கே வந்தது சோனாவின் பிரச்சினை. சோனாவிடமிருந்து 75 லட்ச ரூபாய் முன் பணம் வாங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. 'மங்காத்தா' படத்திற்கு பிறகு சோனாவின் படத்தைதான் இயக்க வேண்டும் இவர். அஜித்-வெங்கட்பிரபு காம்பினேஷனில் படம் தயாரித்தால் அதன் மார்க்கெட் வேல்யூ என்னவென்று தெரியாதவரல்ல சோனா. கையில் பணமே இல்லை என்றாலும், இருவரது கால்ஷீட் ஒப்பந்தத்தை காட்டினால் கோடிகளை கொட்டுறோம் என்று சொல்வதற்கு ஏராளமான பைனான்சியர்கள் இருப்பதும் அவருக்கு தெரியும். இந்த நேரத்தில் வெங்கட்பிரவுக்கு கால்ஷீட் கொடுத்தால் அது சோனா தயாரிக்கும் படமாக அமையும் என்பது அஜித்திற்கு தெரியாதா என்ன? அதனால்தான் உடனடியாக ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்தாராம். இந்த படத்தை இயக்கப் போவது வெங்கட்பிரபு அல்ல என்பதுதான் இப்போதைக்கு தெரியவருகிற உண்மை.
அதுமட்டுமல்ல.. சுமார் பதினைந்து கோடி ஒரே பேமென்ட்டாக கை மாறியிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். யார்... யாருக்கு கொடுத்திருக்கிறார்? ஏ.எம்.ரத்னம் அஜித்துக்கு கொடுத்திருக்கிறாராம். ஆனால் பணம் கைமாறவில்லை. வெறும் வார்த்தையளவில்தான் இருக்கிறது இந்த டீலிங் என்றும் தகவல் வருகிறது. ஆனால் இப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து இண்டஸ்ட்ரியில் மேலும் மேலும் உயர்ந்து நிற்கிறார் அஜித். ஏன் அப்படி? பல வருடங்களுக்கு முன் நடந்த பெப்ஸி - தயாரிப்பாளர்கள் பிரச்சினையில் அஜித், பெப்ஸி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். ஆனால் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பாளர்கள் பக்கம். இந்த நேரத்தில் ரத்னம், அஜித்தை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. பெரும் தொகை ஒன்றை அட்வான்சாகவும் கொடுத்திருந்தார். அஜித் எதிரணிக்கு ஆதரவாக நின்றதில் கடுப்பான ரத்னம், நாளை விடிவதற்குள் ரூபாயை எண்ணி டேபிளில் வைத்தாலே போச்சு. இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டார். ரோஷம் பொங்கி வந்தது அஜித்திற்கு. நடிகர்கள் யாருமே வாங்குகிற பணத்தை பெட்டியில் வைத்து பூட்டுவதில்லை. அது உடனே முதலீடாகிவிடும். விடிவதற்குள் பணம் புரட்டலாம் என்றால், அன்றைய தேதியில் அவர் இவ்வளவு பெரிய ஸ்டாரும் இல்லை. எப்படியோ விடிய விடிய அலைந்து போராடி பணத்தை புரட்டிய அஜித், அதை திருப்பி கொடுத்துவிட்டு தன் கொள்கையில் உறுதியாக நின்றார். அதன்பின் அஜித்தின் உயரம் இண்டஸ்ட்ரியே அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயர்ந்தது. யாருக்கு வேண்டுமானால் கால்ஷீட் தருவேன். ஆனால் ஏ.எம்.ரத்னம் கம்பெனிக்கு மட்டும் கிடையவே கிடையாது என்றார் அஜித். அவரை நம்பி நான் இல்லை என்றார் ரத்னம். ஆனால் காலம் உருட்டிய உருட்டலில் கருங்கற்கள்கூட புழுதியாக மாறுவதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். விஜய்யோ, அஜித்தோ கைகொடுத்தால்தான் பழையபடி நிமிர முடியும் என்ற நிலையில் இருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இந்த நேரத்தில்தான் தானே அழைத்து இந்த வாய்ப்பை கொடுத்தாராம் அஜித். இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்துடன் சிம்புவும் இணைவார் என்று அடிபட்ட செய்திகள் தவிடு பொடியானது. இந்தப் படம் விஷ்ணுவர்தனுக்கா அல்லது இயக்குநர் விஜய்க்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியும் வரும் வாரத்தில் இதை தெளிவாக்கிவிடுவார் 'தல' என்கிறது தயாரிப்பாளர் தரப்பு! 'ஜி'யோட கிரீடம் யாருக்கோ...?! கெடச்சா 'வரலாறு'தான்!
| < Prev | Next > |
|---|


