இயக்குநர் விஜய், சீயான் விக்ரம், அனுஷ்கா ஆகியோரின் கூட்டணியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'தெய்வத்திருமகள்'. இப்படத்தை யுடிவி விநியோகம் செய்தது. இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைய இருக்கிறது. இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. 'தெய்வத்திருமகள்' படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எடுக்கிறார். இதில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சீயான் விக்ரம். அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் கதையில் விக்ரமிற்கு இரண்டு கதாநாயகிகள். விஜய்யுடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ள அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன்தான் அந்த நாயகிகள். அனுஷ்கா விஜய்யின் 'தெய்வத்திருமகளிலும்', எமி ஜாக்சன் 'மதரசாபட்டினத்திலும்' நடித்துள்ளனர்.
எமி ஜாக்சனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் விஜய்தான். இந்த படம் ஹாலிவுட் படமான 'பார்ன் ஐடென்டிட்டி'யைத் தழுவி எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. 'தெய்வத்திருமகளும்', 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான பகுதி வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. எனவே லொகேஷன் பார்ப்பதற்காக விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இது ஒரு ஸ்டைலான போலீஸ் ஆக்ஷன் படமாம். வரும் டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி, ஏப்ரலில் முடியுமாம். மே மாதம் திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். கமலுடன் 'விஸ்வரூபம்' படத்தில் எமி நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விக்ரம் படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காம்பினேஷன் ஓ.கேதான் ஆனா... அடுத்தவங்க ஐடென்டிட்டி-ய மட்டும் விடமாட்டேன்றீங்களே........
| < Prev | Next > |
|---|


